வேலை தேடி… வேலையாளை தேடி…

காலை 11.30. வழக்கமான வேலை நாள்.

தண்ணீர், NOTEPAD, அதன் மேல் ஒரு பேனா, மாத நாட்காட்டி மேலும் சில அலங்கார பொருட்களால் சூழப்பட்ட என் கணிணியில் நான் வேலை செய்துகொண்டு இருந்தேன்.

திடிரென்று என் கைபேசி சிணுங்கியது…

“மச்சி என்னோட கம்பெனி-ல Front-end Developer-கு opening இருக்கு. HR எவ்ளோ try பண்ணாலும் நல்ல profile கிடைக்க மாட்டிக்குதாம். யாராச்சும் refer பண்ண சொல்றாங்க.”, என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்தான்…

“உன்னோட circle-ல யாராச்சும் job try பன்றன்களா டா? At least 2+ exp இருந்தா போதும் டா. Referral Bonus கூட கிடைக்கும்.”,

“FB- ல status போடுறேன் மச்சி. யாராச்சும் கேட்டா உன்ன Contact பண்ண சொல்றேன். Weekend call பண்றேன் டா. Bye.” என சொல்லி என் வேலையை பார்க்க தொடர்ந்தேன்.

சில மணி நேரம் கடந்தது. உணவு இடைவேளை.

Hotel-லில் கிடைத்ததை சாப்பிடுபவனுக்கு அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட career-ல் வீட்டு சாப்பாடு. புது மாப்பிள்ளை வேறு. சொல்லவா வேண்டும். அளவு சற்று அதிகம் தான். ஆனாலும் ருசியில் அளவு பெரிதாய் தெரியவில்லை. எப்படி தெரியும்? 4 ஆண்டுகள் Hostel உணவு. அடுத்த 6 ஆண்டுகள் Hotel உணவு. மூக்கை பிடிக்க சாப்பிட்டு முடித்தேன்.

மதியம் சுமார் 2.30 மணி.

“Hi Vel. This is Ravi, a B.E. Graduate.”, HR என் மேஜையில் வந்து ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.

கருத்த, சோர்வடைத்த முகம். மெலிந்த மேனி. அத்யாவசியத்தால் அணியப்பட்டு இருந்த முழுக்கை சட்டை. கையில் இரு A4 sheet. நிச்சயம் Resume -வாக தான் இருக்க வேண்டும்.

என் மேஜையையும் என்னையும் அவன் ஏறிட்டு பார்த்த விதத்தில் தெரிந்து கொண்டேன், அவன் உள்ளத்தின் ஏக்கங்களை. பாம்பின் கால் பாம்பறியும் தானே?

“Hi Ravi, How are you?”, என கூறி என் கைகளை நீட்டினேன்.

“I’m fine sir”, தயக்கத்துடன் கை குலுக்கினான்.

அவன் வாக்கியத்தில் இருந்த “fine”, அவன் முகத்தில் இல்லை. ஒருதுளி தைரியமும் அவன் கைகளில் தெரியவில்லை.

“How may I help him, Balaji?”, என் HR-ஐ நோக்கி கேட்டேன்.

அதுவரை ஆங்கிலத்தில் பேசியவர் பின் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

“Actually வேல், இவரு பக்கத்து company-க்கு interview வந்து இருப்பார் போல. அது ஒரு BPO. So, Engineering Candidates-லாம் வேண்டாம்னு சொல்லிடான்கலாம். அதான் நம்ம company- ல ஏதாச்சும் opening இருக்கானு கேக்குறாரு. But for now, there is no opening for Fresher in our company.”, என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே குறுக்கிட்டேன்.

“Balaji, For the past three years, I’ve never come across any opening for fresher in our company!. By the way இவர நம்ம security-ஏ அனுப்பி விட்டு இருப்பாரே. போன மாசம் என்னோட cousin நம்ம company-க்கு interview வர்றப்ப கூட அவர தாண்ட முடியல. அப்புறம் எப்படி இவரு உள்ள வந்தாரு? ” ஆச்சர்யமாக கேட்டேன்.

“Actually, front office பக்கம் நான் தற்செயலாக போகும் போது தான் இவர் நம்ம security கிட்ட பேசிட்டு இருந்தாரு. நான் தான் அவரோட Resume வாங்கிப் பார்த்தேன். HTML, JavaScript னு one or two UI Skillsets mention பண்ணி இருந்தாரு. உங்க FB ல கூட அடிக்கடி UI-க்கு நிறைய opening இருக்குன்னு status update பண்றிங்களே அதான் just intro பண்ணலாமேனு தோனிச்சு வேல்.”, நடந்ததை மிகச் சுருக்கமாக சொல்லி முடித்தார் பாலாஜி.

“Will try my level best பாலாஜி”, என்று சொல்லிக்கொண்டே ரவியின் Resume-வை வாங்கிப் பார்த்தேன்.

எங்கோ இருந்து வெட்டி ஒட்டிய Career Objective, அதன் பின் Educational Summary, அதைத் தொடர்ந்து Project Details, முடிவாய் கொஞ்சம் Personal Information. நான் ஆறு ஆண்டுகளுக்கு முன் வைத்திருந்த அதே format. ஒரே ஒரு வித்தியாசம் அப்போது நாங்கள் percentage னு சொல்லுவோம். இப்போது CGPA.

எங்கு தேடிப்பார்த்தும் Extra Curricular Activities என்ற ஒரு தலைப்பை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைப் பற்றி கேட்டாலும் படித்தக் கல்லூரி மீது பலியை தூக்கிப் போடபோகிறான். என் நெருங்கிய நண்பன் முத்தாறு வின் தம்பிக்கே என்னால் ஒரு வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. எதற்கு வெட்டி பேச்சு.

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு வெள்ளைக்காரன் (எங்களுக்கு சோறு போடும் எசமான்) வந்து Project status update கேட்பான். I had a discussion with Mr. Ravi, என்றா நான் அந்த வெள்ளைகாரனிடம் சொல்ல முடியும்? ரவிக்கு மீண்டும் ஒருமுறை கையை குலுக்கி அனுப்பிவிடலாம் என்று முடிவுக்கு வந்தேன்.

பாலாஜியை நோக்கி, “Actually பாலாஜி, currently I’m unaware of any IT opening for freshers. Will update you once…”, என்று நான் பேசிக்கொண்டு இருக்கும் போதே ரவி குறுகிட்டான்.

“Sir, எங்க college-ல நாங்க தான் முதல் set. Guide பண்ண senior கூட இல்ல. ஊருல தெரிஞ்ச அண்ணன் ஒருத்தர் சொல்லி CTS-ல off-campus ஒன்னு attend பண்ணுனேன். 500 பேருல 10 பேர தான் எடுத்தாங்க. நான் first round-லேயே reject ஆகிட்டேன். சொந்தகாரங்க எல்லாரும் எனக்கு வேலை கிடைக்க தகுதி இல்லனு சொல்றாங்க. அப்பா கிட்ட பேசவே அசிங்கமா இருக்கு. phone-அ switch off பண்ணனும் நினைச்சாலும் எதாச்சு ஒரு கம்பெனில இருந்து call வருமோ னு சொல்லி phone-அ on பண்ணி வச்சிருக்கேன். என்னோட Friends எல்லாருக்கும் இந்த நிலைமை தான்.”, என்று சொல்லிக் கொண்டேத் தொடர்ந்தான் ரவி.

“ஒரு Software Engineer ஆகணும்னு கனவோட Chennai-க்கு வந்தேன். இது வரைக்கும் அம்பதி நாலு (54) IT கம்பெனி ஏறி இறங்கிருக்கேன். ஆனா அஞ்சு (5) கம்பெனில தான் interview attend பண்ண விட்டாங்க. அந்த அஞ்சுல நாலு consultancy. 50,000 ரூபாய் குடுத்தா வேலை வாங்கித் தருவாங்களாம். ஏதோ Training cum Placement-னு சொல்றாங்க. எனக்கு அதுல நம்பிக்கை இல்ல sir. அப்டியே நம்பிக்கை இருந்தாலும் கட்ட காசு இல்ல. அதான் எந்த வேலைனாலும் பாக்கலாம்னு முடிவுக்கு வந்துட்டேன். Receptionist, Delivery Boy, Security னு எந்த வேலை இருந்தாலும் சொல்லுங்க சார். இந்தியாவுல எந்த location நாளும் பரவா இல்ல. என்னைய நான் காப்பாத்திக்க ஒரு வேலை வேணும். அவ்ளோ தான் சார். Please Sir”, என்று சொல்லிக்கொண்டே என் கைகளை பிடித்தான்.

என் கண்களில் இருந்து தப்பித்து ஓடத் தயாராக இருந்த கண்ணீர் துளிகளை கைகுட்டையால் கச்சிதமாய் மறைத்துக் கொண்டேன். பாலாஜி கையில் ஏதும் துணி இல்லை போலும். False ceiling-யை ஏறிட்டு பார்ப்பதை போல் அவர் சமாளித்து கொண்டார்.

Cool down Ravi! I can understand your problem. We will definitely get back to you soon. Catch you later Vel. Thanks for your time”. என்று சொல்லிக்கொண்டே கண் இமைக்கும் நேரத்தில் ரவியை என் இடத்தில் இருந்து அழைத்துச் சென்றார் பாலாஜி. HR-ன் சாமர்த்தியம் சொல்லவா வேண்டும்?

“No Problem பாலாஜி”, என்று பதிலளித்த வண்ணம் என் இருக்கையில் அமர்ந்தேன்.

Keyboard- ஐ நோக்கிப் பயணிக்க வேண்டிய என் கைகள் water can -ஐ நோக்கிப் பயணித்தது. எங்கள் உரையாடலில் அதிகம் பேசியது என்னவோ ரவி என்ற போதும், நாவரண்டு போனது எனக்குத்தான்.

என் முகக் கண்கள் monitor நோக்கி இருந்தாலும், அகக் கண்கள் மட்டும் ரவியின் ஏக்கம் நிறைந்த முகத்தையேக் காட்டிக்கொண்டிருந்தது.

என் செவிகளில் ரவியின் சில வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

நாங்க தான் முதல் செட்…
நான் first round-லேயே reject ஆகிட்டேன்…
அப்பா கிட்ட பேசவே அசிங்கமா இருக்கு…
அம்பத்தி நாலு IT கம்பெனி ஏறி இறங்கிருக்கேன்…
Training cum Placement-னு சொல்றாங்க…
கட்ட காசு இல்ல…
Friends எல்லாருக்கும் இந்த நிலைமை தான்…

ரவியின் இந்த வார்த்தைகள், இன்று “A talented resource” எனப் பெயர்பெற்ற இந்த வேல் முருகனின் சில கருப்புப் பக்கங்களை நினைவுக்கு எடுத்து வந்தது…

2008…

CSS Corp, Sutherland என இரண்டு BPO Offer Letters-உடன் கல்லூரியை விட்டு வெளியே வந்த எனக்கு பெரும்பாலான நலம் விரும்பிகளின் உபதேசம், “Vel, Don’t just stop with these BPO. You are worth enough for Infosys” என்பது தான். பணி நியமனம் கொடுத்த அந்த இரண்டு நிறுவனங்களும் என்னை ஓராண்டு தாண்டியும் வேளைக்கு அழைக்கவில்லை என்பது வேறு விசயம்.

சென்னை சென்றால் நிச்சயம் ஒரு பெரிய IT Company-இல் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினேன்.
.
சுமார் ஆறு மாதங்கள் முட்டி மோதிய எனக்குச் சென்னையைப் பற்றித் தெரிந்த விஷயங்கள் இவை மட்டுமே:

தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் மின்தொடர்வண்டியின் நிறுத்தங்கள். பெரும்பாலான MTC பேருந்துகளின் பலகைகளின் நடுவே இருக்கும் எண்களும் அவை நிற்கும்(நிற்கவேண்டிய) நிறுத்தங்களும் மட்டுமே.

இனியும் இங்கு எனக்கு வேலை கிடைக்காது என்றெண்ணி என் வேலை தேடும் படலத்தைக் கோவையில் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன். அன்று என் ஆறு மாத சென்னை வாழ்கையை நான்கு வரிகளில் நான் எழுதிய வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளது…

நெஞ்சமெல்லாம் கனவுகளோடு…
காலையும் மாலையும் தண்ணீரோடு…
இரவுகள் மட்டும் கண்ணீரோடு…
வெட்டியாய்த் திரிந்த வேலையில்லா நாட்கள்…

கோவையில் எனக்கு software வேலை எதுவும் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு மாத காலமே போதுமானதாக இருந்தது. அன்று ஒரு முடிவுக்கு வந்தேன். எந்த வேலை கிடைத்தாலும் பார்க்கவேண்டும். இந்தியாவிற்குள் (அன்று என்னிடம் Passport இல்லை) எந்த location என்றாலும் செல்ல தயாராக இருக்கவேண்டும். என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இது தான் என் முடிவு. ரவியின் வார்த்தைகள் என் கண்களின் வழியே கண்ணீராய் வெளிவந்ததின் காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

நாட்கள் வாரங்களாகின… ஒருநாள் Civil Engineer-ஆக இருந்த என் மைத்துனன் ஜெகதீஷ் அவனுக்குத் தெரிந்த ஒருவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான். சுமார் 45 வயது மதிக்கத்தக்கப் பெரியவர் அவர். அனுபவம் மிக்கவர் என்பது அவரின் திமிரானப் பேச்சில் தெரிந்தது. அன்று அவருடன் நடந்த உரையாடல்:

“ஜெகதீஷ் உன்னப் பத்திச் சொன்னான். எந்த மாதிரி வேலை வேணும் உனக்கு?”, அவர்.

“எந்த வேலைனாலும் செய்றேன் சார்.”, நான்.

“இப்போதைக்கு நம்ம area-வுல எதுவும் opening இல்லையே.”, அவர்

“எந்த location-னாலும் போறேன் sir.”, நான்.

“அசாம், பஞ்சாப் pakkam இருந்தா?”, அவர்.

“கண்டிப்பாப் போறேன் sir”, naan.

“But Immediate Opening. அதான் யோசிக்கிறேன்”, அவர்

“room-ல bag ready-ஆ தான் sir இருக்கு.”, நான்.

அவர் முகம் புன்னகைத்தது. அவரைச் சுற்றி இருந்தவர்களிடம் இருந்து மட்டும் ஏளன சிரிப்பு…

“சரி தம்பி. இந்த மூணு e-mail id-க்கும் உன் bio-data-வ அனுப்பு. “Referred by Raja sekar”-னு போடு. உடனே reply வரும். OK வா?”, உரிமையுடன் என் சட்டைப் பைக்குள் இருந்த பேனாவை எடுத்து என் resume-க்குப் பின்னால் எழுதிக் கொடுத்தார்.

வெற்றிக்கனியை கிட்டதட்ட பரித்ததுபோல் இருந்தது. பக்கத்தில் இருந்த Browsing Center சென்று அந்த மூன்று e-mail id-க்கும் என் resume அனுப்பினேன். கையோடு Naukri, Monster சென்று உலாவி விட்டுப் பின் yahoo, gmail, rediff, hotmail என வெவ்வேறு தளங்களில் நான் வைத்திருந்த ஐந்து e-mail ids-ஐ திறந்து மூடினேன்.

“Inbox(3)” என்ற வார்த்தை தற்செயலாக என் கண்களில் பட்டது.

அடுத்த கணம் என் இதய துடிப்பு பலமடங்கானது.

ஆர்வத்தோடு திறந்துப் பார்த்தேன்.

“Delivery to the following recipient failed permanently”.

அன்று மதிய உணவிற்காக வைத்திருந்த 25 ரூபாயை Browsing Center-க்குக் கொடுத்து வீடு திரும்பினேன்.

வழக்கமாக இரவு பொழுதுகளில் என் கண்ணீரை துடைக்க ஒரு கைக்குட்டை மட்டுமே போதுமானதாக இருக்கும். அன்று மட்டும் தலையணை உரைகூடப் பத்தவில்லை. என் வாழ்வில் மாற்றம் வரும் நாள் நாளை என்று அப்போது தெரியவில்லை.

மறுநாள் சென்னையில் இருந்த நண்பன் ஒருவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு…

“மச்சி எனக்கு ஒரு Data Entry Job கிடைச்சிடுச்சி டா. மாசம் 2500/- சம்பளம். Shift Basis தான். அதனால வேலை பார்த்துகிட்டே IT job -கு try பண்ணலாம். இன்னமும் ஆள் எடுக்குறாங்க. யாராச்சும் இருந்தா சொல்லு.”

“Congrats மச்சி. நானும் வரேன் டா.”, வாழ்த்துக்களுடன் விண்ணப்பத்தையும் வைத்தேன்.

“உனக்கு இது set ஆகாது டா. arrears நிறைய வச்சி யாராச்சும் இருந்தா சொல்லு.” வினோதமானப் பதில் அவனிடம் இருந்து வந்தது.

“டேய் ஒண்ணுமே புரியல. தெளிவா சொல்லு. Please”, குழப்பத்துடன் கேட்டேன்.

“இங்க வேலைபாக்குற எல்லாரும் +2 முடிச்சவங்கள மட்டும் தான் டா. ஏதாச்சும் degree முடிச்சிருந்தாக் கூட consider பண்ண மாட்டாங்க. நிறைய arrears இருந்தா chance கிடைக்கும். உன்னோட resume- வ பார்த்தா security கூட உன்ன விட மாட்டாரு.”, தெளிவாய் சொல்லி முடித்தான் நண்பன்.

“ஒரு மணி நேரத்துக்கு அப்புறமா போய் உன்னோட e-mail check பண்ணுடா. என்னோட mobile- ல balance இல்ல. நாளைக்கு சென்னைல இருப்பேன்.”, என்று சொல்லித் தொடர்பை துண்டித்தேன்.

அன்றிரவே சென்னை நோக்கிப் பயணித்தேன். என்னைப் போன்ற பட்டதாரிகளுக்காகவே railway-ல் ஒரு special coach இருக்குமே. ஆம் அதே unreserved coach. ஒவ்வொருப் பயணத்திலும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். என்ன ஒன்று, அத்தனையும் கசப்பான அனுபவங்களாக இருக்கும். அவ்வளவு தான்.

மறுநாள் interview. அன்று என்னை நீங்கள் பார்த்திருந்தீர்களானால், இன்று நான் ரவியை எப்படி வர்ணித்திருந்தேனோ அப்படித்தான் நீங்களும் என்னை வர்ணித்திருப்பிர்கள்.

கருத்த, சோர்வடைத்த முகம். மெலிந்த மேனி. அத்யாவசியத்தால் அணியப்பட்டு இருந்த முழுக்கை சட்டை….

அன்று அந்த HR- யிடம் நான் என்னைப் பற்றி நான் அறிமுகம் செய்துகொண்டது (Self Introduction) இன்னமும் நன்றாகவே நினைவில் உள்ளது.

My name Vel Murugan madam. Complete +2… But not go exam. Worked in computer center. I… I… I know word, excel, paint… paint and… and… like that madam. I want work big company like this.

எத்தனை எத்தனை மேடைப் பேச்சுக்கள்… எத்தனை எத்தனை Group Discussions… எத்தனை எத்தனை Seminars… இவ்வளவு ஏன்? நான் படித்தப் படிப்பையே மறைத்துத் தான் எனக்கு முதல் வேலை கிடைத்தது.

அன்றிரவு என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. படித்தப் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையா? இல்லை வேலைக்குத் தேவையான தகுதி எனக்கில்லையா? தகுதி இல்லை. இதுவே உண்மை. ஒரு சரியான வழிகாட்டி இருந்திருந்தால் தேவையான தகுதியை வளர்த்துக்கொண்டிருந்திருப்பேனே! இத்தனை அசிங்கம், அவமானம் இருந்திருக்காதே!

வழிகாட்டி இல்லை. ஆனாலும் பயணித்தாக வேண்டும். ஒவ்வொரு முறையும் முட்டிமொதியப் பிறகே தெரிந்துகொள்வேன் கடந்து வந்தது தவறானப் பாதை என்று. இப்படியாக சுமார் நான்கு ஆண்டுகள் மிகக் கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து ஒரு வழியாகக் கரை சேர்ந்தேன்.

சென்னை வந்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. கடந்த சில காலங்களில் ஒரு முறை கூட எனது கசப்பான நாட்கள் நினைவிற்கு வந்ததில்லை. அவற்றை அசை போடவும் நேரம் கிடைத்ததில்லை. ஆனால் இன்று மட்டும் எப்படி அவை என் எண்ண ஓட்டத்தில் வந்து சென்றன?

ரவி. இவனை சந்தித்ததினால்தான். இவனும் ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வருவான். ஆனால் அந்த நாள் என்று என்பதுதான் இங்கு கேள்வி.

அவனுக்கும் வழிகாட்டி என்று யாரும் இல்லை. நான் கடந்து வந்த அந்தக் கசப்பான நான்கு ஆண்டுகளை அவனும் கடக்க வேண்டுமா?

ஒருபுறம் அனுபவம் மிக்க வேலை ஆட்களை தேடி ஒரு கூடம். மறுபுறம் அந்த அனுபவத்தை தேடி ஒரு கூடம். அவர்கள் தேடும் அனுபத்தை பெறுவது அப்படி ஒன்றும் பெரிதான காரியம் அல்ல. இன்று ரவியிடம் பாலாஜி எதிர் பார்த்த HTML, CSS, JavaScript எல்லாம் ரவி கல்லூரியில் படித்த DSP paper- உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகவும் எளிமையானது தான். இதில் பிரச்சனை என்னவென்றால், ரவி யாரிடம் சென்று கற்றுகொள்வான் என்பது தான்.

அன்று இரவு என் மனைவியிடம் நடந்த எல்லாவற்றையும் கூறினேன். அவளது பதில் பலப் புதிர்களை உடைத்தெறிந்தது. மறுகணமே ரவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

“ரவி. நான் வேல் பேசுறேன்.”

“வேல்… வேல் sir? சொல்லுங்க sir. Good Evening sir.”, பதற்றம் நிறைந்த பதில் ரவியிடம் இருந்து.

“Weekends free- யா இருப்பியா?”, நான்

“நான் எல்லா நாளும் free தான் sir.”, ரவி

“Laptop வச்சிருக்கியா?”, நான்

“Govt. ல குடுத்து இருக்கு sir”, ரவி

“More than enough. Weekends வீட்டுக்கு வா. உன்னோட முதல் IT job- கு என்ன தேவையோ அதக் கத்து தர்றேன். With in 2 or 3 months, you will be into a IT company, not as a fresher; but as an experienced professional. வீட்டு address s.m.s. பண்ணிருக்கேன். சனிக்கிழமை பார்க்கலாம்”, என்று கூறி முடித்தேன்.

“Thank you sir”, ரவி

“Be the change that you want to see in the society” என்ற ஒரு பொன் மொழியை நினைவுக் கூர்ந்து அன்று உறங்கச் சென்றேன்.


  • Vanitha

    Be the change! Awesome.. Your writing is more artistic vel and it took me back to those memorable days. Its a wonderful reader friendly narration! I’m sure this write up is a shadow of the bigger things. All the very best Vel! Keep going!

    • Vel Murugan S

      Thanks a lot for reading my story, Vanitha. I can never ever forget the interview days at Apna Technologies. Tough days of my life which taught a lot and gifted some good friends like you.